திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. ஒரு நாளைக்கு 350 முதல் 400 பேர் வரை தொற்று பாதிப்புக்குள்ளாகின்றனர். அதேபோல் சில நாள்களாக கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று(ஆக.13) தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, கரோனா நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சென்னையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தபோது களப்பணி குழுக்கள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் ஒரு குழுவும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பகுதிகளில் ஒரு குழுவும் என ஐஏஎஸ், ஐபிஎஸ், சுகாதார உயர் அலுவலர்கள் தலைமையில் இரண்டு களப்பணி குழுக்கள் அமைக்கப்பட்டு தொற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாவட்டம் முழுவதும் 50 முதல் 60 இடங்களில் மருத்துவ முகாம்கள் மூலம் நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. அவற்றை 100 மருத்துவ முகாம்களாக அதிகரிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி பண்டிகை குறித்து தலைமைச் செயலர் ஆலோசனை!