தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் மேல் பதிவான நிலையில் கடந்த சில நாள்களாக தொற்றின் பாதிப்பு 600க்கும் கீழ் குறைந்து வருகிறது.
முன்களப் பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி
இதனை வரவேற்கும் விதமாக திருவள்ளூர் ஜென் சாலையில் அமைந்துள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் புனித ஆலயத்தில் முன்களப் பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், முன்களப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டதுடன் உணவும் வழங்கப்பட்டது.
தொற்று குறைவு
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, “திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக பதிவாகிக் கொண்டிருந்தது. இதனால் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியர் என்ற முறையில் பல முன்னேற்பாடுகளை எடுத்தாலும், கரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் முன்களப்பணியாளர்கள்தான்.
தற்போது, சராசரியாக 450 நபர்களுக்கு தொற்று எண்ணிக்கை இருந்துவரும் நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் 100க்கும் கீழ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை இருக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.