திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உள்பட்ட கண்ணன் கோட்டையில் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14.85 ஏக்கர் பரப்பளவில் ஒரு டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் நீர்த்தேக்கம் அமைப்பதற்கான திட்டத்தை தொடங்கியது.
மூன்று ஆண்டுகளில் முடிக்க வேண்டிய கட்டுமான பணிகள் விவசாயிகளின் எதிர்ப்பால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக ஏழு ஆண்டுகள் ஆனது. பிறகு 70 சதவீதம் பணிகள் மட்டுமே நடைபெற்ற நிலையில், சென்னையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தை திறந்துவைத்தார்.
கண்ணன் கோட்டையில் நடைபெற்ற இதற்கான துணை விழாவில் இறை வழிபாட்டுக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் பொன்னையன் நீர் வெளியேற்ற திறவு கோலின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பேரவைத் தேர்தல் மட்டுமல்ல, எதிர்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி தொடரும் - அதிமுக அறிவிப்பு