திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 278 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகள் சோழவரம், வில்லிவாக்கம், எல்லாபுரம் கடம்பத்தூர் திருவாலங்காடு, புழல், பெரியபாளையம், பூண்டி ஆகிய ஒன்றியங்கள், திருமழிசை, ஊத்துக்கோட்டை, திருநின்றவூர் ஆகிய பேரூராட்சிகளில் 278 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
இதுவரையில் 7,573 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 4 ஆயிரத்து 335 பேர். அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,104 பேர். இதுவரை வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "திருவள்ளூர் சுற்றியுள்ள ஒன்றியங்களில் வைரஸ் தொற்று அதிகமாக காணப்படுவதால் தொடர்ந்து தீவிர பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு தெருவுக்கும் குழுக்கள் அமைத்து அவர்கள் மூலமாக இருமல், சளி இருந்தால் உடனடியாக வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வைரஸ் பாதிக்கப்பட்ட இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது" என்றார்.