திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொடுகாடு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் வெங்கடேசன். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் லோகநாதன் என்பவர், கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவிடாமல் இடையூறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தொடுகாடு பகுதியில் மணல் கடத்தலில் அடையாளம் தெரியாத நபர்கள் ஈடுபடுவதாக வந்த தகவலையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் நேரில் சென்று கேட்டபோது, லோகநாதனுடம் அவரது கூட்டாளிகளும் அவரை கட்டை, கற்களால் பலமாகத் தாக்கியுள்ளனர்.
இதில் நிலைகுலைந்துபோன வெங்கடேசனை அப்பகுதியினர் மீட்டு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மணல் கடத்தலை தட்டிக் கேட்டதால் லோகநாதனின் கூட்டாளிகள் தேவராஜ் உள்ளிட்ட பத்து பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வெங்கடேசன் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திமுக பிரமுகர் லோகநாதன் உள்ளிட்ட பத்து பேரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: பிப்.29 இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்!