திருவள்ளூர்: பூண்டி ஒன்றியம் கிராமத்தில் 200 இருளர் மற்றும் ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் இலவச பட்டா வழங்கும் நிகழ்ச்சி கைவண்டுர் ஊராட்சிமன்ற தலைவர் சவுகார்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இருளர் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு இலவச பட்டாவை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன், “ஒரு நாளைக்கு 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இந்தியாவே பாராட்டக்கூடிய முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்கிறார். சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடியிடம் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய பணம் என்ன ஆச்சு? தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி 24 ஆயிரம் ரூபாய் கோடி பணத்தை திருப்பிக் கொடுங்கள் என தலைநிமிர்ந்து கேள்வி கேட்டார்.
மேடையில் வைத்து பணத்தை கேட்டதால் வெட்கப்பட்ட ஒன்றிய அரசு ஜிஎஸ்டி பணத்தை தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது. மேலும் பிரதமர் சங்கடப்பட்டு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளதால் மற்ற மாநில முதலமைச்சர்களும் தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர்” என்றார்.
இந்நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: வி.பி.துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க அவசியமில்லை - கடுப்பான ஈபிஎஸ்!