திருவள்ளூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட கொண்டம்மபுரம் தெருவில் திமுக பிரமுகர் பீகம் சந்த் என்பவருக்கு சொந்தமான நகை கடையில் கடந்த ஜனவரி மாதம் வெல்டிங் இயந்திரத்தை வைத்து கதவை உடைத்து 30 சவரன் தங்க நகை, வைர கற்கள், வெள்ளி நகைகள், 2 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்,
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் மகேஸ்வரி விசாரணை மேற்கொண்டு வந்தார். மேலும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இதனிடையே நகைக்கடையில் சிசிடிவி கேமரா பதிவு வேலை செய்யாததாலும் நகைக்கடை அமைந்த பஜார் வீதி முழுவதிலும் உள்ள கடைகளில் ஒன்றில்கூட சிசிடிவி கேமரா முறையாக பொருத்தப்படாமல் இருந்ததாலும் குற்றவாளிகளை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருவள்ளூரைச் சேர்ந்த சதீஷ், புருஷோத்தமன் ஆகிய இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், நகைக்கடையில் கொள்ளை அடித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களிடமிருந்து 24 சவரன் நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க: பசுக்களுக்கு வளைகாப்பு... ஆந்திராவில் விசித்திர கலாசாரம்!