திருவள்ளூர்: மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆதார் சேவை தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தை நாடுகின்றனர்.
30 பேருக்கு மட்டுமே டோக்கன்
தினமும் 100-க்கும் மேற்பட்டோர் புதிய ஆதார் அட்டை, திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட தேவைகளுக்காக ஆதார் மையத்திற்கு வருகின்றனர். ஆனால் நாள்தோறும் 30 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
இதன் காரணமாக பொதுமக்கள் அதிகாலை 4 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகம் வந்து காத்திருக்கின்றனர். .
அரசின் பல்வேறு பணிகளுக்கு ஆதார் அட்டை அவசியம் என்பதால், பொதுமக்கள் பல நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (ஆக.18) ஆதார் சேவை மையத்திற்கு 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.
தொழில்நுட்ப பிரச்னை
காலை 10 மணிக்கு ஆதார் சேவை மையத்திற்கு வந்த அலுவலர்கள் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பொதுமக்கள் கோரிக்கை
அப்போது அலைக்கழிக்கும் அலுவலர்களை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் ஆதார் சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்றும், கூடுதலாக ஆதார் பணியாளர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனையடுத்து வட்டாட்சியர் மணிவாசகம் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, ஆதார் சேவை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: தவணை கட்டாததால் டிராக்டர் பறிமுதல் - தரையில் படுத்து விவசாயி ஆர்ப்பாட்டம்