திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டார். இதையடுத்து அவர் கூறுகையில், "திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 17 லட்சத்து 30 ஆயிரத்து 117 ஆண் வாக்காளர்களும், 17 லட்சத்து 67 ஆயிரத்து 940 பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 772 பேர் உள்பட மொத்தம் 44 லட்சத்து 98 ஆயிரத்து 129 வாக்காளர்கள் உள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக ஒரு வாக்குச் சாவடியில் ஆயிரம் வாக்காளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மூன்றாயிரத்து 622 வாக்குச்சாவடிக்கு பதிலாக ஐந்தாயிரத்து 130 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதன் காரணமாக அந்தப் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்களில் வாக்குச்சாவடி மையம் அமைப்பது அல்லது ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வேறு ஏதாவது ஒரு கட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் உறுதி செய்யப்படும்" என்றார்.
இதைத் தொடர்ந்து, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் கீழ் வாக்காளர் பட்டியலை பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் வெளியிட்டனர். நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரவின் பி நாயர் வெளியிட்டார். அதில், 12 ஆயிரத்து 149 பேர் நீக்கப்பட்டு, 48 ஆயிரத்து 701 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், வேலூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளான வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கே. வி. குப்பம், குடியாத்தம் ஆகிய ஐந்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அனைத்து கட்சியினரின் முன்னிலையில் வெளியிட்டார். இதில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டார்.
இதையும் படிங்க: ’ஜனவரியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்’: ஆட்சியர் செந்தில்ராஜ்