திருவள்ளூர்: பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. நகராட்சி 17வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவருக்கும் இவரது சகோதரர் மோகன் என்பவரின் மகள் காயத்திரி குடும்பத்தினருக்கும் இடையே, 6 சென்ட் நிலத்தை பிரிப்பது தொடர்பாக பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.
இரு தரப்புக்கும் தலா 3 சென்ட் பிரிப்பது தொடர்பான நிலத்தகராறு இருந்து நிலையில், மோகன் குடும்பத்தினர் நிலத்தின் பின் புறத்தில் வீடு கட்டியுள்ளனர், முன் பகுதியில் உள்ள காலி நிலத்தை இளங்கோவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரச்னைக்குறிய இந்த வீட்டில், இவர்களது சகோதரி மகள் குணசுந்தரி வாடகைக்கு குடியிருந்துள்ளார். அண்மையில் வீட்டை காலி செய்த குணசுந்தரி வீட்டின் சாவியை காயத்திரியிடம் வழங்காமல், இளங்கோவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காயத்திரிக்கும், குணசுந்தரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
புகார்: மேலும் இளங்கோவுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தினை அளவீடு செய்வதற்காக அதிகாரிகள் வந்தபோது, இளங்கோவுக்கும் அவரது அண்ணன் மகள்கள் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்படவே, மீண்டும் நிலத்தினை அளவீடு செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி அன்று திமுக கவுன்சிலர் இளங்கோ, தனது அண்ணன் மகள்களை வீடு புகுந்து தாக்கியுள்ளார். அதன் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானது.
இது தொடர்பாக பொன்னேரி காவல் நிலையத்தில், காயத்திரி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திமுக கவுன்சிலர் இளங்கோ உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதே போல் குணசுந்தரி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், காயத்திரியின் உறவினர் ராபர்ட் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருதரப்பும் அளித்த புகாரின் பேரில், இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்த பொன்னேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை: இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி மாலை காயத்திரியின் உறவினர் ராபர்ட், தான் பிரச்னையில் உள்ளதாகவும், உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறி, பொன்னேரி அடுத்த நந்தியம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த தனது தாய் மாமா பாலமுருகனை அழைத்துள்ளார். எண்ணூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பாலமுருகன், தனது அக்காள் மகன் ராபர்டை பார்ப்பதற்காக ஆலாடு பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது பிரச்னைக்குறிய நிலத்தின் முன் ராபர்ட், பாலமுருகன் இருவரும் இருந்த போது, அங்கு வந்த சிலர் ராபர்ட்டை தாக்கியதாகவும், அப்போது அங்கிருந்து ராபர்ட் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. அந்த கும்பல் பாலமுருகனை பலமாக உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர். இதனைக் கண்ட பாலமுருகனின் உறவினர் தீனதயாளன், பாலமுருகன் தாக்கப்படுவது கண்டு அதிர்ச்சியடைந்து, அவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளார். தீனதயாளன் வருவதை கண்ட கும்பல் அங்கிருந்து தப்பி உள்ளனர்.
இதையடுத்து பலமாக தாக்கப்பட்ட பாலமுருகனை மீட்ட தீனதயாளன், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பாலமுருகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பாலமுருகனின் சடலம் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நிலத் தகராறில் தொடர்புடையவர்களின் மற்றொரு சகோதரரின் மகன்கள் வினோத், திலிப், அவரது நண்பர் ராஜ்கிரண் ஆகிய மூவர் பாலமுருகனை அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர்.
இதனையடுத்து தனியார் நிறுவன ஊழியரான பாலமுருகனை கொலை செய்த வழக்கில் வினோத், கிரண்ராஜ் ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான திலீப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நிலத் தகராறில் சமாதானம் பேச வந்தவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஆடு மேய்க்கச் சென்ற பெண் பாலியல் வன்புணர்வு செய்து கொலை.. 17 வயது சிறுவன் கைது!