ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாமக கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அம்பத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, "ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அம்பத்தூர் மதுரவாயல் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டணிக் கட்சியினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். வெற்றி நமக்கானதாக இருக்க வேண்டும். வருகின்ற தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விடும்.
திமுக என்கிற கட்சி ஒரு பெரு கம்பெனி. அதில் மகன், மருமகன் ஆகியோர் மேலாளர்கள். கடலில் மணல் அள்ளும்போது ஊழல் செய்தது திமுக கட்சி. 2000 கோடி ஊழல் செய்ததை கண்டு மன்மோகன்சிங் பயந்துவிட்டார். நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரப்போகிறார். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம்தான் வரப்போகிறோம். ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுபவர் நல்ல வேட்பாளர் திறமையானவர் அவரை வெற்றிபெறச் செய்யுங்கள்" என கேட்டுக் கொண்டார்.
மேலும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் அனைத்துக் குறைகளையும் நிறைவேற்றித் தர மத்திய, மாநில அரசுகளை அணுகி விரைவில் செய்து தரப்படும் என ராமதாஸ் உறுதியளித்தார்.