திருவள்ளூர் மாவட்டம் அருகே சின்னகாவனம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் பொன்னேரி-பழவேற்காடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிய அரசு மதுபானக் கடையால் பொதுமக்களுக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதாகவும், பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக செல்ல முடியாத சூழல் நிலவுகிறது எனவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
மதுபானக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி கோட்டாட்சியரிடமும் தாசில்தாரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதற்கு தீர்வு காணப்படாததால், பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திடீரென பொன்னேரி பழவேற்காடு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் தாங்கள் இந்த பிரச்னை குறித்து பேச வேண்டும் என கூறியதால், அங்கிருந்து வேன் மூலம் அவர்களை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கோட்டாட்சியர் நந்தகுமார் முன்னிலையில் சமரச கூட்டம் நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சார்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை கோட்டாட்சியர் ஏற்றுக்கொண்ட பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.