திருவள்ளூர் மாவட்டம், ஆரணி காவல் நிலையம் சார்பாக கரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் மனிதனின் நிலை எவ்வாறு மாறும் என்பதை தத்ரூபமாக விளக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஆரணி-பெரியபாளையம் சாலை, ஆரணி புதுவாயல் சாலை, பஜார் வீதி சாலை என ஆரணி எம்ஜிஆர் சிலை அருகே உள்ள மும்முனை சாலையில் கரோனா படத்தை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரி தலைமை தாங்கினார், உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவர் நிஷாந்தி, ஊத்துக்கோட்டை துணைக் கண்காணிப்பாளர் சந்திரதாசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
அப்போது அவர்கள் கூறும்போது: “நோய் தாக்கினால் பாதிப்புக்குள்ளானவருக்கு உற்றார், உறவினர்கள் அருகிலிருந்து மருத்துவ உதவியை வழங்கலாம். ஆனால், கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களை கவனிக்க உறவினர்களைக் கூட அனுமதிக்க மாட்டார்கள். எனவே, தேவையின்றி வெளியே சுற்றாதீர்கள்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் கூறியதைப் போன்று அத்தியாவசிய பொருட்கள் வாங்கும்போது தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசத்தை அணிந்து வெளியில் செல்வோம் என்று உறுதி ஏற்க வேண்டும்” என்று கூறினர்.
இதையும் படிங்க: அலட்சியத்தோடு சுற்றித் திரியும் வாகன ஓட்டிகள் - போலீஸ் எச்சரிக்கை