திருவள்ளூர்: ஆந்திர மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் சித்தூர் மாவட்டம், அம்மம்பள்ளி கிருஷ்ணாபுரம் நீர் தேக்கத்தில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கிருஷ்ணாபுரம் நீர் தேக்கத்தில் இருந்து நேற்று (செப்.9) இரவு 1000 கனஅடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு அங்கு தொடர் மழையின் இருப்பை பொறுத்து இந்தத் தண்ணீர் அளவு உயர வாய்ப்புள்ளது.
இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரமுள்ள மக்கள் கவனமாக இருப்பதோடு வெளியகரம், நெடியம், சாமந்தவாடா, சொரக்கா பேட்டை தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால் பாலத்தை கடக்க முயல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பாதுகாப்பு பணியில் வருவாய், காவல், தீயணைப்பு மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தரை பாலத்தில் நடந்தும், இரு சக்கர வாகனங்களில் சென்றும் வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் , காவல் துறையினரும் பொதுமக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மழை காலத்திற்கு தயாராகும் அரசு - பராமரிப்பு பணிகளை முடிக்க தீவிரம்