சுத்தமல்லி சத்யா நகரை சேர்ந்த சகுந்தலாவின் இளைய மகன் பிரதீப். இவர் மீது ஏற்கனவே போக்சோ வழக்கு உள்ள நிலையில், தற்போது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதே வழக்கில் சகுந்தலாவின் மூத்த மகன் பிரசாந்த்தைக் கைது செய்ய இன்று (நவ.24) காலை சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் குமாரி சித்ரா தலைமையிலான காவல் துறையினர் வீட்டுக்கு சென்றனர்.
காரணமின்றி தனது மகன்களைக் கைது செய்வதாகக் குற்றஞ்சாட்டிய தாயார் சகுந்தலா, மூத்த மகன் பிரசாந்த்தைக் கைது செய்ய விடாமல் தடுத்துள்ளார். அப்போது சகுந்தலாவை காவல் துறையினர் தரக்குறைவாக திட்டியதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மகன்களின் கைதால் அக்கம்பக்கத்தினரால் ஏளனத்திற்கு ஆளான சகுந்தலா, அவமானம் தாங்காமல் காவல் ஆய்வாளர் முன்னிலையில் வீட்டுக்குள் சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
அதன் பின்னர் வெப்பம் தாங்க இயலாமல் அலறியபடி வெளியே வந்த அவரை காப்பாற்ற சுற்றத்தார், காவல் துறையினர் முயன்றனர். தீயை அணைப்பதற்குள் அவர் உடல் முழுவதும் எரிந்தது. கருகிய நிலையில் இருந்த சகுந்தலாவை மீட்ட காவல் துறையினர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எதிர்பாராதவிதமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சகுந்தலா உயிரிழந்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சுத்தமல்லி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
சகுந்தலாவின் குற்றச்சாட்டு, அதைத் தொடந்து நேர்ந்த அவரது உயிரிழப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், ”கடந்த 3ஆம் தேதி சுத்தமல்லியில் 13 சவரன் நகை, லேப்டாப் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் பிரதீப், அன்புராஜ், அருள்ராஜ் ஆகிய மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டோம். இதில் தாங்கள் திருடியதை மூவரும் ஒப்புக் கொண்டனர்.
அதன்பேரில் மூன்று பேரையும் நேற்று (நவ.23) கைது செய்தோம். விசாரணைக்காக பிரதீப்பின் சகோதரர் பிரசாந்தை இன்று (நவ.24) அதிகாலை காவல் துறையினர் அழைத்து வரச் சென்றனர். அங்கு ஏற்பட்ட களேபரத்திற்கு பின்னர் சகுந்தலாவின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காவல்துறையினர் சென்ற நிலையில், தனது வீட்டுக்குள் சென்ற சகுந்தலா தீக்குளித்திருக்கிறார்.
காவல் துறையினர் தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த முயற்சி வீண்போனது. இது குறித்து தற்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். காவல் துறை கண்ணெதிரே சகுந்தலா தீக்குளிக்கவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்”என்றார்.
முன்னதாக இளைய மகன் பிரதீப் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மூத்த மகனையும் விசாரணைக்கு அழைத்து சென்ற நிலையில் மனமுடைந்த சகுந்தலா தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது. சகுந்தலாவிற்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். கருத்து வேறுபாடு காரணமாகக் கணவர் தர்மராஜைப் பிரிந்த இவர், தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் ஆய்வாளர் உள்பட 15 பேர் கைது