தூத்துக்குடி:வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொட்டைப்பாக்குகள் இறக்குமதி செய்ய மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது என தடையும், சில நாடுகளில் இருந்து 100 சதவீதம் வரி செலுத்தி இறக்குமதி செய்து கொள்ளலாம் என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து உத்தரவிட்டுள்ளது.
இருந்தபோதிலும் சிலர், இக்கட்டுப்பாடுகளை மீறி வேறு ஏதேனும் பொருட்கள் பெயரில் துறைமுகங்கள் வழியாக கொட்டை பாக்குகளை இறக்குமதி செய்து வருவதாக தெரிகிறது.
கடந்த நவம்பர் மாதம் இந்தோனேஷியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த ஒரு கப்பலில் முந்திரி பருப்பு இறக்குமதி செய்யப்படுவதாக ஆவணங்கள் இருந்தன. சந்தேகமடைந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதில் இருந்த சில கன்டெய்னர் பெட்டிகளை சோதனை செய்தனர்.
அதில், சுமார் 23 டன் கொட்டை பாக்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதுகுறித்து விசாரணை நடத்தினர். அவற்றின் மதிப்பு சுமார் 2 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொட்டைப்பாக்கு இறக்குமதி தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேரை பிடித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி மாநகராட்சி 18 வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் என்ற ஜான் (43) என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனைக்குப் பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறுகையில், "சீனிவாசன் என்ற ஜான் 15 நாட்கள் தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 15 நாட்களுக்குப் பின்னர் மதுரை, அல்லது ராமேஸ்வரம் சிறையில் அடைக்கப்படுவார். மேலும், அவர் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்" என்றார்.