சேலம்: எடப்பாடி அடுத்த செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தனுஷ் கண்டன். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவே இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பெண் வீட்டார் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து ரோஷினியை வீட்டிலேயே அடைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு எடப்பாடி செட்டிாங்குறிச்சி பகுதியில் உள்ள தனுஷ் கண்டன் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்று (ஜன.23) மதியம் 3.30 மணி அளவில் காரில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தனுஷ் வீட்டிற்குள் புகுந்து ரோஷினியை கடத்தி சென்றனர்.
இதையும் படிங்க: மங்களூரு வங்கி கொள்ளை: நெல்லையில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து 15 கிலோ தங்க நகைகள் பறிமுதல்!
அப்போது, காரில் சென்றவர்களை தடுக்க வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்களையும் இடித்து தள்ளிவிட்டு பெண்ணுடன் காரில் தப்பி சென்றனர். இந்த நிலையில், கணவன் வீட்டில் இருந்த ரோஷினியை அவரது உறவினர்கள் வீடு புகுந்து கடத்திச் செல்லும் பதைபதைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
மேலும், இது குறித்து தனுஷ் கண்டன் மற்றும் அவரது குடும்பத்தார் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடு புகுந்து பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.