திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (27). பால் வியாபாரம் செய்துவருகிறார். இவரது தாய் சுகுணா (49), தங்கை குமாரி ஆகிய இருவரும் நேற்று காலை திருநின்றவூர் ஏரியில் மாடு மேய்க்கச் சென்றுள்ளனர். இரவு ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் கமலக்கண்ணன் ஊர் முழுக்கத் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே திருநின்றவூர் ஏரியில் இரண்டு பெண் சடலம் இருப்பதாக திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்று காவல் துறையினர் பார்த்தபோது ஏரியில் இறந்து கிடப்பது வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுகுணா, குமாரி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
உயிரிழந்த குமாரி ஏரியின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் ஏரிக்குள் சென்றதால் காப்பாற்றும் பொருட்டு ஏரியில் இறங்கியபோது சேற்றில் சிக்கியுள்ளார். மகள் ஏரியில் சிக்கித் தவிப்பதைக் கண்ட சுகுணா மகளைக் காப்பாற்ற அவரும் ஏரியில் இறங்கியுள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.