திருவள்ளூர்: பொன்னேரி அரசு மருத்துவமனையில், எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் சமூக நிதி பங்களிப்பில் 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினிமயமாக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 17) நடைபெற்றது.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பால்வளத் துறை அமைச்சர் நாசர், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்க
நிகழ்ச்சிக்குப் பின்னர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 784 பேர் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தால் டிசம்பர் மாத இறுதிக்குள் ஒரு கோடி பேர் பயனடைவார்கள்.
இதற்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள், 30 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்கள் களத்தில் உள்ளனர். மருத்துவர்கள் பணிமாற்றம், தற்காலிகப் பணிகள், தகுதி அடிப்படையில் இருப்பது பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தவுடன் வரன்முறைப்படுத்தப்படும்.
பழவேற்காட்டில் உள்ள மருத்துவமனைக்குத் தேவையான வசதிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் பேசப்படும். செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
மூன்றாவது டோஸ் தேவையில்லை
முன் களப்பணியாளர்கள் மூன்றாவது டோஸ் தடுப்பூசிகள் போடத் தேவையில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டால் மட்டுமே போதும். திமுக ஆட்சி பொறுப்பேற்ற மே 7ஆம் தேதி முதல், நாள் ஒன்றுக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் இருக்கிறது. தற்போது ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது” என்றார்.
இதையும் படிங்க: 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது? - மா.சு பதில்