திருவள்ளூர்: ரயில் நிலையம் அருகே கருக்குழாய்த் தெருவைச் சேர்ந்தவர் லோகநாயகி, இவருக்கு உடன் பிறந்த நான்கு சகோதரிகள் உள்ளனர். இவர்களில் ராணி என்பவர் காஞ்சிபுரத்திலும், மீதமுள்ள மூன்று பேரும் அருகருகே வீடுகளில் வசித்துவருகின்றனர்.
லோகநாயகி, சரஸ்வதி என்ற இருவரும் ஒரே வளாகத்தில் தனித்தனி குடும்பங்களாக வசித்துவந்த நிலையில், சரஸ்வதியின் கணவருக்கும்; லோகநாயகிக்கும் அடிக்கடி நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது.
கொடூரமான தாக்குதலால் உயிரிழந்த சோகம்
இந்நிலையில், லோகநாயகி மகள் சிவரஞ்சனி (27), சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். இடப் பிரச்சினை பற்றிய வாய்த் தகராறு முற்றி ஒரு கட்டத்தில் பாலச்சந்தர் காய்கறி வெட்டும் கத்தியைக் கொண்டு சிவரஞ்சனியின் முதுகு, கழுத்து, மார்பு பகுதிகளில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தவரைக் கண்டு, அவரது தாய் பதறிக் கூச்சலிட்ட சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் சிவரஞ்சினியை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மருத்துவமனையில் சிவரஞ்சனியைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். அவரின் சடலத்தை மீட்டு உரற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
குற்றவாளி கைது
இதன் பின்னர், திருவள்ளூர் நகரக் காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பாபி, உதவி ஆய்வாளர் மாலா, உதவி ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் கொலையாளி பாலச்சந்திரன் கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.
அரசுப் புறம்போக்கு நிலத் தகராறு காரணமாக ஐடி ஊழியரை குத்திக் கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூட்டணி தலைமையின் முடிவே எங்களின் முடிவு - சரணடைந்த துரை வைகோ