திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவிற்குள்பட்ட லட்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் பிரதீப். ஹெச்.சி.எல் என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் அவர் அந்த கிராமத்தில் உள்ள பெண்களுடன் நட்பாக பழகி அவர்களை உல்லாச விடுதிகளுக்கு அழைத்து சென்று குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மேலும் அதனை வீடியோவாக எடுத்து அதை, அந்த பெண்களிடம் காண்பித்து மிரட்டி பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, அப்பெண்களின் புகைப்படங்களை சமூக வலைதளம் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதேபோல், அதே ஊரைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி ஒருவரிடமும் இதேபோல் நடந்துகொண்டுள்ளார். மேலும் அப்பெண்ணுக்கு நடந்த திருமண ஏற்பாட்டை அறிந்த செந்தில் எனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமென மிரட்டியுள்ளார்.
இது குறித்து ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் செந்தில் பிரதீப்பை கடந்த ஒன்றாம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் செந்தில் பிரதீப் சிறையில் இருந்து வெளியே வராதபடி அவருக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணி்ப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
செந்திலுக்கு உள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சியங்களை அழிப்பதற்கும், மேலும் பல பெண்களை சீரழிக்க வாய்ப்பும் இருப்பதால் பிணையில் வராதவாறு அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.