கரோனா வைரஸின் தாக்கம் பல்வேறு மாவட்டங்களில் குறைந்து வந்தாலும் சென்னை மாவட்டத்தில் மட்டும் உச்சத்திலேயே இருந்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் காய்கறி விற்பனை சந்தையான கோயம்பேடு மார்க்கெட் என சொல்லப்படுகிறது. இதன்தாக்கம் மேலும் அதிகமாகாமல் இருக்க பூ மற்றும் பழ விற்பனையை மாதவரம் பஸ் நிலையத்திற்கு மாற்றினார்கள் .
காய்கறி மார்க்கெட் வழக்கம்போல் இயங்கிவந்தது. ஆனாலும், வைரஸின் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத காரணத்தினால் கோயம்பேடு மார்க்கெட் தற்காலிகமாக பூந்தமல்லியை அடுத்த திருமழிசை துணைக்கோள் நகரத்தில் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திருமழிசை துணைக்கோள் நகரம் 311 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த இடத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து, தற்காலிகமாக மார்க்கெட் அமைப்பதற்காக அந்தப் பகுதியை பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு சீர் செய்யும் பணி நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, 20 அடிக்கு 10 அடி என கடைகள் அமைக்கப்பட்டு அளவீடு செய்யும் பணியும் கடைகளுக்கான ஸ்டால் மற்றும் மின் விளக்குகள் அமைப்பதற்கான பணியும் நடந்து வருகிறது. வரும் 7ஆம் தேதி முதல் இப்பகுதியில் மார்க்கெட் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பணிகள் துரிதகதியில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மீண்டும் இந்த இடத்தை ஆய்வு செய்த பிறகே எத்தனை கடைகள் இங்கு வரப் போகிறது என்பது குறித்த முழு விவரம் தெரியவரும்.
மார்க்கெட் இடமாற்றத்திற்கு ஆந்திர மாநிலத்திலிருந்தும், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்தும் வரக்கூடிய காய்கறிகளைக் கொண்டு வரக்கூடிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 24 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோயம்பேடு செல்லாமல் அருகிலுள்ள திருமழிசை செல்வது தங்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து இடைஞ்சல் இல்லாமல் அனைத்து காய்கறிகளையும் கொண்டு செல்ல இந்த இடம் தங்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
இதையும் பார்க்க: பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் தேவை - ராகுலுக்கு ஐடியா சொன்ன அபிஜித் பானர்ஜி