திருவள்ளூர்: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து நேற்று (அக்.31) மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "சராசரி மழையை விட வடகிழக்கு பருவமழை அதிகமாக இருந்தாலும் அனைத்து துறை அதிகாரிகளும் திருவள்ளூர் மாவட்டத்தில் தயாராக உள்ளனர். 133 இடங்கள் அதிக பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது, மாவட்ட அளவிலான அதிகாரி தலைமையில் 42 முன்னேற்பாட்டு குழுக்களும் 22 உதவி குழுக்களும் தயாராக உள்ளது.
கடந்த ஆண்டைப்போல, இந்த வருடமும் நீர் தேக்கங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் வெளியேற்றப்பட்டு வரும் நீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர் வரத்திற்கு ஏற்றார்போல் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, பின்னர் நீர் திறப்பினை அதிகப்படுத்தவும் அரசின் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் முன்னேற்பாடு குழு தேடுதல் மற்றும் பாதுகாத்தல் குழு, நீர் மற்றும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் குழு நிவாரணம் மற்றும் தங்குமிடம் குழுக்கள் மாவட்ட மற்றும் தாலுகா அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 526 கிராம ஊராட்சிகளில் 4338 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது, 400 தன்னார்வலர்களுக்கு 'ஆப்தி மித்ரா' என்ற பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை வரையும் பட்சத்தில் 13 மீனவ கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கையாக அறிவிப்பு வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. 660 தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 604 இடங்களில் கால்நடைகளை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்காக 144 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக 42 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்காக மருத்துவத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நோய்வாய் பட்டால் தீர்ப்பதற்காக மருந்து மாத்திரைகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 74,680 மணல் மூட்டைகள், நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.
உதவி எண்கள்: மழை சேதம் குறித்து தகவல் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா 1077 என்ற எண்ணிற்கும், 04427664177 & 27666746, மூலம் தகவல் பகிர 9444317862 எண்ணையும் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என அவர் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை