ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், மஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் என்பவர், திருவண்ணாமலை நகரில் உள்ள ஆக்சிஸ் தனியார் வங்கியில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிகிறார். இவர் பல ஊர்களில் உள்ள பல பெண்களிடம் தமிழ் மேட்ரிமோனி திருமண தகவல் மைய இணையதளம் வாயிலாக தொடர்பு எண்களை எடுத்து, அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி, 50 சவரன் தங்க நகைகளைப் பெற்று, அதனை அடகு வைத்தும் விற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பறிக்கும் நகைகளை கார்த்திக் ராஜ், திருவண்ணாமலை கோபுரத்தெருவில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரின் பெயரில் அடமானம் வைத்தும், விற்றும் வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஏழாம் தேதி கோவை மாநகரிலுள்ள கவுண்டம்பாளையம் பல்லவன் நகரில் வசித்துவரும் ஒரு பெண்ணிடம் 7 சவரன் நகையை கார்த்திக் ராஜ் பெற்றுள்ளார். ஆனால், நகையை திருப்பித் தராததால் அந்தப் பெண்மணி கோவை மாநகர சாய்பாபா காலனி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி தலைமையிலான காவல் துறையினர் கார்த்திக் ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, பெண்களிடம் பறித்த நகைகளை பிரசாந்த் என்பவர் மூலமாக அடகு வைத்ததும் விற்பனை செய்ததும் தெரியவந்ததால் அவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கோவை, ராஜபாளையம், ஈரோடு, சிவகாசி, பொள்ளாச்சி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த பெண்களிடம் அவர் நகைகளைப் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து தற்போது 100 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்; அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.