ஆவடியில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மூன்று லட்சத்து 45 ஆயிரம் பேர் உள்ளனர். இதனடிப்படையிலும், நகராட்சி வருவாயின் அடிப்படையிலும் ஆவடி பெருநகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு முன்னர் ஊழல் உழன்று கொண்டிருக்கும் ஆவடி நகராட்சியில் பணியாற்றும் அலுவலர்களை இடமாற்றம் செய்துவிட்டு, பின்னர் மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து சமூக செயற்பாட்டாளர்கள், ஆவடியைச் சுற்றிலும் ஏரிகள் இருந்தும், அங்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது என புகார் தெரிவித்தனர். மேலும், தண்ணீர் பஞ்சத்தை போக்குவதாக கூறிக்கொண்டு அதற்கு திட்டமும் தீட்டி ஒரு லாரி தண்ணீர் கொடுத்து விட்டு ஒன்பது லாரிக்கு கணக்கு காட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதேபோல், வீடு கட்டுவதற்கு கட்டட அனுமதியாக ஒரு அறைக்கு (சமையலறை) 35,000 ரூபாய் வரை தரகு கேட்கிறார்கள் என புகார் தெரிவிக்கும் சமூக செயற்பாட்டாளர்கள், இது தமிழ்நாட்டில் வேறு எந்த நகராட்சியிலும் இல்லாத கொள்ளை என்று கடுமையாக விமர்சித்தனர்.
மேலும், அனுமதி பெறாமல் வீடு கட்டியிருந்தால் அந்த உரிமையாளரை அழைத்து ஐந்து லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், தவறினால் உங்கள் வீட்டை சீல் வைத்து இடிக்கப்படும் என்றும் நகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் மிரட்டுவதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இதே அலுவலர்களை வைத்துக்கொண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்துவதால் மக்களுக்கு எவ்விதமான பயனும் இருக்காது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.