திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அருகே பல்வேறு பகுதிகளில் போலி மருத்துவர்கள் கிளினிக் நடத்தி வருவதாகத் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமாருக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனியார் கிளினிக், மருத்துவமனைகளில் திடீர் சோதனை செய்து போலி மருத்துவர்களைக் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், திருத்தணி அமிர்தாபுரம் - திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சோதனை செய்தபோது வேளாங்கண்ணி(43) என்பவர் மருத்துவம் படித்ததற்கான எந்த ஒரு சான்றும் இல்லாமல் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அப்பெண்ணிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் பிளஸ் 2 வரை மட்டுமே படித்துவிட்டு லேப் டெக்னீசியனாக சில காலங்கள் பணிபுரிந்தது தெரிய வந்தது. மேலும் அந்த அனுபவத்தில் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக திருத்தணி பகுதியில் தனியார் கிளினிக் அமைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது கண்டறியப்பட்டுள்ளது.
அதன்பின், சுகாதாரத்துறை அதிகாரிகளின் புகாரின் பேரில் காவல் துறையினர் வேளாங்கண்ணியைக் கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுகாதாரத்துறை அதிகாரி தயாளன் கூறுகையில்," இதே போன்று போலி மருத்துவர்களைக் கண்டறியும் பணி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிறந்து 15 நாள்களே ஆன பெண் குழந்தை ஆற்றில் புதைப்பு! - தந்தையின் கொடூர செயல்