திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருத்தணி முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகும். இக்கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இந்நிலையில் இம்மாதம் ஆடி மாதம் என்பதாலும், மூன்று நாட்கள் தொடர் விடுமுறையையொட்டியும் இன்று அதிகாலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டன.
திருத்தணி முருகன் மலைக் கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வாகனங்களில் வந்ததால், போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மேலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் குவிந்ததால் பொதுவழியில் சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரைத் தரிசித்தனர். மலைப்பாதையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் திருத்தணி-அரக்கோணம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புப் பணி, வாகனங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபடாததால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மூலவருக்கு அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டது.