திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கரோனா தடுப்புப் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனாவைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கை குறித்தும், தொற்று மேலும் பரவாமல் தடுக்க இனி செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெஞ்சமின், "கரோனா வைரசைக் கட்டுப்படுத்த திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கை எடுத்துவருகிறது. இதுவரை மாவட்டத்தில் மொத்தம் நான்காயிரத்து 343 நபர்களுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் இரண்டாயிரத்து 793 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 468 நபர்கள் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேலும் இந்தக் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 282 சிறப்புக் குழுக்களையும், நான்காயிரத்து 728 துணைக் குழுக்களையும் ஏற்படுத்தியுள்ளோம். இந்தக் குழுவினர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவி செய்துவருகின்றனர்.
தற்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறிக் கடை, மளிகைக் கடை, மருந்து கடை உள்ளிட்டவற்றில் வியாபாரம் செய்பவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம். மாவட்டத்தில், பட்டரைபெரும்புதூரில் உள்ள டிடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயிரத்து 400 படுக்கை வசதியுடன் சிகிச்சை அளிக்கவுள்ளோம்" என்றார்.