திருவள்ளூர்: வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் காவியா (22). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.
மாணவி ஓட்டி வந்த கார் விபத்து
இவரது நண்பர் அக்சத் (22). இவரும் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் காரில் வெளியே சென்று விட்டு பூந்தமல்லி நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை காவியா ஓட்டி வந்தார்.
இருசக்கர வாகனங்கள் சேதம்
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, குன்றத்தூர் அருகே வந்துபோது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையின் தடுப்பின் மீது ஏறி சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மீது வேகமாக மோதியது. இதை கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் 5 இருசக்கர வாகனங்கள் சேதமானது.
சிறுமிக்கு பலத்த காயம்
குறிப்பாக கோவூரைச் சேர்ந்த தர்ஷினி என்ற சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது தந்தை திலக் உள்ளிட்ட 4 பேர் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: லெபனான்: எரிபொருள் டேங்கர் வெடித்து 28 பேர் உயிரிழப்பு