நாடு முழுவதும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவராலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் விளிம்பு நிலை மக்கள், தினக் கூலிகள் என பல்வேறு தரப்பினரும் அன்றாட செலவுக்கே திண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பாக கொடுக்கப்படும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் ஏழை எளியோருக்கு உதவி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் சிறுணியம், விஜயநல்லூர் ஆகிய கிராமங்களில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வந்த சுமார் 2000 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், எண்ணெய், மசாலா பொடிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை முதல்கட்டமாக ஆச்சி மசாலா நிறுவனத்தின் துணை தலைவர் சிவகுமார், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன், பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.
பின்னர் ஆச்சி மசாலா நிறுவனத்தின் துணை தலைவர் சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''ஆச்சி மசாலா நிறுவனத்தின் தலைவர் பத்மாசிங் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் குடும்பங்களுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினோம்'' என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு அரசு உதவி மையத்தில் சேவை செய்துவரும் கால்பந்து வீரர்!