திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கைவண்டூர் கிராமத்தில் வசிப்பவர், சாமுவேல். 1948ஆம் ஆண்டு பிறந்த சாமுவேல், தனது கிராமத்திற்கு அருகே உள்ள பாண்டூர் டிஈஎல்சி காபிஸ் மேல்நிலைப்பள்ளியில் பழைய எஸ்எஸ்எல்சி எனும் பதினொன்றாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
தனது பள்ளிப்பருவத்தில் சொந்த மாமாவின் கால்பந்து விளையாடும் நுணுக்கத்தால் கவரப்பட்ட சாமுவேல், கால்பந்து விளையாட்டின்மீது கொண்ட மோகத்தினால், தனது மாமா கால்பந்து விளையாடும் இடங்களுக்கெல்லாம் சென்று விளையாட்டு மைதானத்திலிருந்து வெளியே வரும் கால்பந்தை விளையாட்டு வீரர்களுக்கு எடுத்துக்கொடுத்து வந்துள்ளார்.
பின்னர் தானும் கால்பந்து விளையாட்டை விளையாடத் தொடங்கி, தனது 7ஆம் வகுப்பில் முதன்முதலில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, சிறந்த வீரருக்கான விருதை சாமுவேல் பெற்றார்.
100 மீட்டர், 200 மீட்டர், 200 மீட்டர் ரிளே உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகளில் சிறந்து விளங்கிய சாமுவேல் அப்போதைய தமிழ்நாடு அமைச்சர்கள் மதியழகன், என்.வி. நடராஜன் ஆகியோர் கரங்களால் பதக்கங்களைப் பெற்றுள்ளார். பின்னர் தனது பள்ளிப்படிப்பை முடித்த சாமுவேல், வீட்டில் நிலவிய வறுமையின் காரணமாக மேல் படிப்பினைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
தடைகளைத் தகர்த்து குடும்ப வாழ்க்கையில் கால்பந்துபோராட்டம்: இதனால் தனது கைவண்டூர் கிராமத்தில் கால்பந்து, கபடி மற்றும் கைப்பந்து பயிற்சியினை தொடங்கி 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைத்துள்ளார். தனது வாழ்வாதாரத்திற்காக ஓவியங்கள் வரைந்து தனது குடும்பத்தை நடத்தியும் வந்தார்.
இதனையடுத்து தனது 35ஆவது வயதில் முதியோர் விளையாட்டுப் போட்டி குறித்து அறிந்தும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், தனது 55ஆவது வயதிலேயே முதன்முதலில் முதியோர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
பின்னர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப் மற்றும் 100x4 ரிளே விளையாட்டுப் போட்டிகளில் தேசிய மற்றும் மாநில அளவில் பங்கேற்று 150-க்கும் மேற்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வென்றுள்ளார்.
வறுமையிலும் சாதிக்கத்துடிக்கும் வேகம்: ஓவியங்கள் மூலம் தனது குடும்பத்திற்குத் தேவையான வருமானத்தை ஈட்டி வந்த சாமுவேலுக்கு ஒருகட்டத்தில் ஓவியக் கலையும் நலிந்துபோனதால் வருமானமின்றி வறுமையில் வாடி வந்தார்.
மேலும் தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்பதற்கு தான் சம்பாதித்த வருமானம் மற்றும் நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து கடன் வாங்கி, ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்று வந்த நிலையில், வறுமையின் காரணமாக பல போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனதாகவும் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
சாமுவேல் தற்பொழுது ஃபின்லாந்தில் (FINLAND) நடைபெறும் வேர்ல்டு மாஸ்டர் அத்லெடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாஸ்டர் அத்லெடிக் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்பால் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஃபின்லாந்து நாட்டிற்கு செல்வதற்கு பணமின்றி வறுமையில் வாடி வருகிறார்.
மேலும் விளையாட்டுப்போட்டிகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குவது போல், முதியோர் விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கினால், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க உதவியாக இருக்கும் எனவும் மூத்த விளையாட்டு வீரர் சாமுவேல் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வெளிச்சத்திற்கு வராத பல ஜெய்பீம் கதைகள்; போலீசாரின் சித்ரவதைக்குத் தொடர்ந்து ஆளாகும் வேதனை நிறைந்த ஆதிப்பழங்குடியின சமூகம்!