திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் அன்னம்மாள்(72). இவர், கன்னியாகுமரியில் தனது மகள், இரு பேத்திகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மகள், பேத்தியின் வருமானத்தை நம்பி, மூதாட்டி தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்தச் சூழலில் ஊரடங்கு காரணமாக அன்னம்மாளின் பேத்தி சரிவர வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதன் காரணமாக கடும் வறுமையில் தவித்துள்ளனர். ஒருபக்கம் வயிற்றுப் பசியைப் போக்கவும் வழி இல்லாமல், மறுபக்கம் வீட்டு வாடகை கட்டவும் வழியில்லாமல் அன்னம்மாள் பரிதவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் திடீரென அன்னம்மாளை வீட்டைவிட்டு துரத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்தக் குடும்பத்தினர் தங்களது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் காவல் கிணறு காமராஜர் நகருக்கு பொருட்களை எடுத்துக்கொண்டு வந்துவிட்டனர். அங்கும் வீடு இல்லாமல் சாலையோரம் பொருட்களை வைத்து தங்கியிருந்தனர். இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள், மூதாட்டியின் நிலை குறித்து காணொலி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இதன் மூலம் ஏழ்மைக் குடும்பம் வீடின்றித் தவிக்கும் சம்பவம் குறித்து அறிந்த இளைஞர்கள், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை உடனடியாக அந்த குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு வழங்கி உதவி செய்தனர். மேலும் அவர்கள் தங்குவதற்காக உடனடியாக வாடகை வீடு ஒன்றையும் எம்எல்ஏ இன்பதுரை ஏற்பாடு செய்து கொடுத்தார்.
சூழ்நிலை அறிந்து உடனடியாக உதவி செய்த இளைஞர்கள், சட்டப்பேரவை உறுப்பினருக்கு மூதாட்டியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.