பஞ்சமி நிலத்தை பாதுகாக்க வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய கிராம மக்கள் - Black flag
நெல்லையில் பஞ்சமி நிலத்தை பாதுகாக்க வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி: கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் இருந்த ஏறத்தாழ அனைத்து இடங்களும் முடிவுற்ற நிலையில், மேற்கொண்டு தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அதன் பின்பகுதியில் சுமார் 1,200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் அலவந்தான் குளம் கிராமத்திற்கு சொந்தமான 335 ஏக்கர் பஞ்சமி நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த 335 ஏக்கர் நிலமும் அலவந்தான் குளம் கிராமத்திற்கு பாத்தியப்பட்டதாக உள்ளது. எனவே பல ஆண்டுகளாக அந்த கிராம மக்கள் நிர்வகித்து வரும் இந்த நிலத்தை, கால்நடை மேய்ச்சலுக்காகவும் விவசாயத்திற்காகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு இந்த நிலத்தை தனியார் சோலார் பேனல் அமைப்பதற்கு கையகப்படுத்த திட்டமிட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பஞ்சமி நிலம் கையகப்படுத்தப்பட்டால் கால்நடைகள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிவதோடு, விவசாயம் பாதிக்கப்பட்டு கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உள்ளது.
ஆகையால் அரசு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி அலவந்தான் குளம், அழகன் தான் குளம், தென்கலம், பள்ளிக்கோட்டை, பள்ளமடை மற்றும் நாஞ்சாங்குளம் உள்ளிட்ட ஒன்பது கிராமங்களில் உள்ள மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தாம்பரத்தில் ரூ. 250 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு