நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர், பணிப்பெண் ஆகிய மூவரையும் ஜூலை 23ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது குறித்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரிக்கும் மதுரையைச் சேர்ந்த திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளுக்கும் இடையே பழக்கம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனடிப்படையில், சீனியம்மாளுக்கு தேர்தலில் போட்டியிட இடம் வாங்கித் தருவதாகக் கூறி உமா மகேஸ்வரி பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த ஆத்திரத்தில் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.