நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. அதிமுக தரப்பில் பல்வேறு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நாங்குநேரி தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எங்களது ஆட்சியில் விவசாயிகளுக்கு தேவையான வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்கள் புயல், வறட்சியால் சேதமடைந்தால் அதற்குரிய நிவாரணத்தை உடனடியாக வழங்கிவருகிறோம். அவர்களுக்கு தேவையான கடன்கள் மற்றும் காப்பீடுகளையும் உடனுக்குடன் வழங்கி வருகிறோம் "என்றார்.
மேலும் உள்ளாட்சி தேர்தல் பற்றி மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து குறித்து பேசிய அவர், "நாங்கள் ஸ்டாலினின் தந்தை கலைஞரை எதிர்த்து வெற்றிபெற்றவர்கள். ஸ்டாலினைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. அதிமுக வரலாற்றில் பயம் என்பதே கிடையாது. அதிமுகவை வழிநடத்திய எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்களுக்கு பயம் என்றால் என்வென்று தெரியாது.
அவர்களால் வளர்க்கப்பட்ட நாங்கள் பயத்திற்கு அப்பாற்பட்டவர்கள். ஸ்டாலின் பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பேசுகின்றார். உள்ளாட்சித் தேர்தல் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அதிமுக அரசு நீதிமன்றத்தை ஏமாற்றி வருகிறது-மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!