நெல்லை மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பண்டாரம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக இவர் தனியாக வசித்து வருகிறார். இவர் தாமிரபரணி ஆற்றில் மீன் பிடித்து அதனை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு (ஜூன் 26) தாமிரபரணி ஆற்றின் அருகே இருந்த சுடலை கோயிலில் அடையாளம் தெரியாத சில நபர்கள் பண்டாரத்தை அரிவாளால் வெட்டியும், இரும்பு கம்பியால் அடித்தும் உள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த பண்டாரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காலையில் அவர் இறந்து கிடப்பதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின் நிகழ்விடத்திற்கு வந்த காவலர்கள் பண்டாரத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவலர்கள் முதற்கட்ட விசாரணையில் இந்த கோயில் அருகே இளைஞர் இரவு நேரங்களில் கஞ்சா புகைக்கவும் மது அருந்தவும் வருதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்த பகுதி முழுவதும் காலி மதுபாட்டில்களும், சிகரெட் துண்டுகளும் கிடந்தன.
அப்படி வந்தவர்களை பண்டாரம் தட்டிக் கேட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பண்டாரத்தை கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இதனையடுத்து கொலையாளிகளை காவலர்கள் தீவரமாக தேடி வருகின்றனர்.