நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் நாராயணன் அமைச்சர் ராஜலெட்சுமி தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் இன்று காலை சிறப்பு தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த அவர் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ’நம்பியாறு - கருமேனியாறு நதி நீர் இணைப்பு திட்டம் ரூ.800 கோடியில் நடைபெற்றுவருகிறது. அதேபோல் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்களை வைத்து தேர்தலை சந்திப்போம். மக்கள் ஆதரவு இருப்பதால், எங்கள் வேட்பாளர் நாராயணன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்’ என்றார்.