திருநெல்வேலியில் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்களில் மறக்க முடியாதவர்கள் கட்டபொம்மன், அவரது தம்பி ஊமைத்துரை. அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலேய ஜெனரல்கள் பலரால் வியந்து பார்க்கப்பட்ட வீரர் ஊமைத்துரை. வரலாற்று பக்கங்களை புரட்டிப்பார்த்தால் வீரபாண்டிய கட்டபொம்மனின் சாதனைக்கு பின்னால் ஒரு மாவீரனாய் திகழ்ந்தவர்.
வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கில் போட்ட பிறகு அவரது தம்பி குமாரசாமி என்ற ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறை பல ஆண்டுகளுக்கு பிறகு அரசு அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் பழமை வாய்ந்த மஹாவீர், விஷ்ணு சிலைகள், பழங்கால ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு ஊமைத்துரையை சிறைவைத்திருந்த அறை இன்றும் பழைமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் வெள்ளையர்களால் சிறையாக பயன்படுத்தப்பட்ட இந்த அறை இன்று வரலாற்று நினைவுகளை தாங்கி நிற்கிறது.
இங்கு ஊமைத்துரை, அவரது அண்ணன் கட்டபொம்மனின் வீர வரலாறு குறித்த வரைபடங்கள், எழுத்துகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை பார்வையிட வரும் மக்களுக்கு ஊமைத்துரையின் போராட்டங்கள் குறித்தும், அவரது வாழ்க்கை குறித்தும் எடுத்துரைக்கும் வகையில் எழுத்துக் குறிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், சுரங்கப்பாதை பராமரித்து வைக்கப்பட்டுள்ளது. "வெள்ளையர்களை எதிர்த்து போராடிய வரலாற்றில் என்றுமே ஊமைத்துரைக்கு ஒரு நீங்கா இடம் உள்ளது. அவர் குறித்த தடயங்கள் அனைத்தும், வரும் தலைமுறையாலும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்கின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். நமது சுதந்திரத்திற்காக பல்வேறு போராட்டங்களையும் தியாகங்களையும் செய்த ஊமைத்துரை போன்ற எண்ணற்ற வீரர்களை இந்த சுதந்திர தினத்தன்று நினைவுகூருவோம்.