நெல்லை: கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதும் நெல்லை மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 19) ஒரே நாளில் மட்டும் 290 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நெல்லை மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு அதிகளவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, மகேந்திரகிரி இஸ்ரோவில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் 40 பேருக்கு ஓரே நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவர்கள் மூலம் உள்ளூர் மக்களுக்கும் அதிகளவு தொற்று பரவும் அபயாம் இருப்பதாக பொதுமக்கள் அச்சப்பட்டனர். எனவே, வடமாநில தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளரா்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘’கரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். இருப்பினும், சமூக இடைவெளி கடைபிடிக்காததாலும், முகக்கவசம் அணியாததாலும் இதுவரை 45 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள வட இந்திய தொழிலாளர்களுக்கான கரோனா தொற்று சோதனைகள் எடுக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது தினசரி 2,400 பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. தொடர்ந்து தினசரி 3000 பேருக்கு கொரோனா தொற்று சோதனை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 1750 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி பொறுத்தவரை நெல்லை மாவட்டத்தில் மட்டும் தனியாக தட்டுப்பாடு இல்லை. தடுப்பூசி போட்ட காரணத்தால் நெல்லலையில் இதுவரை யாரும் இறக்கவில்லை'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை சீண்டிய மதபோதகர் கைது