திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டையில் உள்ள வஉசி மைதானத்தில் நடைபெற்ற 74ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தருவை மைதானத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட காவல் துறை அணிவகுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் கடைபிடிக்கும் வகையில் சமாதான புறாக்களை பறக்க விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தேனி:
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
மேலும், மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு, வருவாய், ஊரக வளர்ச்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், காவல்துறை, அவசர கால ஊர்தி பணியாளர்கள் என தேனி மாவட்டத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட 1952 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
மதுரை:
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 74ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தேசியக் கொடியை ஏற்றினார். இதில் காவல்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல துறைகளைச் சார்ந்த 114 நபர்களுக்கு பதக்கங்களும், 72 பயனாளிகளுக்கு 28 லட்சத்து 74 ஆயிரத்து 600 நலத்திட்ட உதவி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்மண்டல காவல் துறை தலைவர் முருகன், காவல்துறை ஆணையர் பிரேமானந்சின்ஹா, காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 74ஆவது சுதந்திர தின விழா தகுந்த இடைவெளியுடன் கொண்டாடப்பட்டது. இதில், ஆட்சியர் விஜயலட்சுமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி:
நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 74ஆவது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
பின்னர், கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 359 களப் பணியாளர்கள், சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்களுக்கும் ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார். மேலும், இரண்டு லட்சத்து எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். பின்னர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சமாதான புறவை பறக்க விட்டனர். அதைத் தொடர்ந்து கரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த இரண்டு அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு நிவாரணம், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார்.
இதையும் படிங்க...நம்பிக்கை மனிதி: பூரண சுந்தரி ஐஏஎஸ்...!