திருநெல்வேலி: சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை நியமனம் செய்ய, தேடுதல் குழுவை அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியும் துணைவேந்தர் நியமனம் செய்யும் குழுவில் இருக்கவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார். அதற்கு தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும், முதல் முறையாகப் பல்கலைக்கழக மானிய குழு பிரதிநிதி ஒருவரும் இந்தத் துணைவேந்தர் தேடுதல் குழுவில் உறுப்பினராக நியமனம் செய்து ஆளுநர் உத்தரவிட்டு இருந்தார்.
துணைவேந்தரை நியமிப்பதற்கு மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதுதான் வழக்கம். ஆனால், இப்போது நான்கு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநரின் அறிவிப்பை எதிர்த்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வாயிலில் இந்திய மாணவர் சங்க (Sudent Federation of India) நெல்லை மாவட்ட தலைவர் அருள்ராஜ் தலைமையில் ஆளுநரின் உருவப்படம் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்தும், பல்கலைக்கழகங்களில் சனாதன கொள்கையைப் புகுத்தும் நடைமுறையைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆளுநரின் புகைப்படங்களை எரிப்பதற்கு முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஆளுநரின் புகைப்படங்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர்.
அதனை மறுத்த மாணவர்கள் தங்கள் கையில் இருந்த ஆளுநரின் புகைப்படங்களைக் கிழித்துப் போட்டு, ஆளுநரை கண்டித்து கோஷங்களை எழுப்பி, தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். மாணவர் சங்கத்தினரின் போராட்டம் காரணமாகப் பல்கலைக்கழகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.