முல்லை நிலத் தமிழர் விடுதலைக் கட்சி சார்பில் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி நெல்லை ரயில் நிலையம் முன்பு இன்று (அக்.03) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திரைப்பட இயக்குனரும், தமிழ் பேரரசு கட்சி நிறுவனருமான கவுதமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கவுதமன், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட திருத்த மசோதா விவசாயிகளுக்கு எதிரான சட்ட வரைவு என்று கூறப்படுகிறது. ஆனால் இது மனித குலத்திற்கு எதிரான ஈவு இரக்கமற்ற ஒரு சட்டம். இந்த சட்ட வரைவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதே நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
பொது மக்களை வாழவைக்கும் சட்டங்களை கொண்டு வருவதுதான் ஒரு அரசின் கடமை. ஆனால் மோடி அரசு இந்த மண்ணில் வாழும் மக்களின் உரிமையை பறிக்கும் அரசாக உள்ளது. இது போன்று தொடர்ந்து எங்களின் உரிமையை பறித்து அத்துமீறினால், யுத்தம் செய்யும் மண் தமிழ் மண் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை எச்சரிக்கையுடன் கூறுகிறோம்.
இதுபோன்று கொடூர சட்டங்களை இயற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கிறது. இதற்கெல்லாம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பதில் சொல்ல வேண்டியிருக்கும். நினைத்துக்கூட பார்க்க முடியாத தோல்வியை தமிழ்நாடு மக்கள் பரிசாக அளிப்பார்கள். சிறு குறு விவசாயிகள் முற்றிலும் அழிக்கக் கூடிய இந்த கொடூரச் சட்டத்தை ஒருபோதும் தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றார்.
இதையும் படிங்க:வெலிங்டனில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடக்கம்!