திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் நேற்று முழுவதும் பெய்து வந்த இடைவிடாத கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக கனமழையானது நெல்லையில் கொட்டி தீர்த்துக்கொண்டு இருப்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டி பகுதியில் 60 சென்டிமீட்டரை தாண்டி மழை பதிவாகி வருகிறது.
தற்போது வரை இடைவிடாத மழை பெய்து வருவதால் நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட முழுவதும் 245 பேரிடம் மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் மழைநீர் சூழ்ந்த வீடுகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு வரை 1694 பேர் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு அரசு சார்பில் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட முழுவதும் 107 ஜேசிபி எந்திரங்கள் மூலம் 507 நிலை மீட்பு அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் கோட்டை அளவில் இரண்டு கண்காணிப்பாளர்கள் மற்றும் வட்டளவில் எட்டு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இது மட்டுமின்றி பேரிடர் மீட்பு பணிக்காக மாவட்ட முழுவதும் எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு அலுவலர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால செயல்பாட்டு மையம் (2501012, 2501070, 1077) மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் (9489930261) அமைக்கப்பட்டு தொடர்ந்து மாவட்டத்தின் நிலையை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதி கனமழை எதிரொலி: தென் மாவட்டங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து!