முன்னோர்களுக்கு மாதந்தோறும் அமாவாசை தினத்தில் திதி கொடுத்து வணங்குவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி மாதம் வரும் அமாவாசை தினத்தில் திதி கொடுப்பது அதிக பலனை கொடுக்கும் என்ற நம்பிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஆற்றங்கரைப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்குவர்.
அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆற்றில் நீராடிச் செல்வார்கள். இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டு ஆடி அமாவாசை தினம் நாளை தொடங்கவுள்ளதால், வழக்கம்போல் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள்.
ஆனால் தற்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நாளைய தினத்தில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக திருநெல்வேலியில் யாரும் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறையில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும், நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
தற்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், ஒரே இடத்தில் அதிக அளவில் மக்கள் கூடுவதால் வைரஸ் தொற்று அதிகம் ஏற்படும் அபாயம் இருப்பதாலும், பொதுமக்கள் நலன் கருதி ஆடி அமாவாசை நாளில் பொதுமக்கள் சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொள்ள ஆற்றின் கரையோரங்களில் வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.