நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, ராதாபுரம், திருநெல்வேலி, நாங்குநேரி, அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேவையான 2,311 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெல்லையை அடுத்த ராமையன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அங்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் சமீபத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த விற்பனை கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குடோனில் நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் சென்று இரண்டு கேமராக்களின் மின் இணைப்புகளை துண்டித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இன்று காலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களது முதல்கட்ட விசாரணையில், ராமையன்பட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து சிறுவர்கள் நள்ளிரவு புறா பிடிக்க சென்றபோது கேமராக்களை சேதப்படுத்தியததாக கூறப்படுகிறது.
இருப்பினும், தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டன. அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி நடப்பதாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துவரும் சூழ்நிலையில் தேர்தல் நெருங்கும் நிலையில் கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை செல்ஃபோனில் தொடர்புகொண்டு கேட்டபோது, "நேற்றிரவு ஐந்து சிறுவர்கள் குடோன் கேமராவை சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். புறா பிடிக்க சென்றபோது கேமராவை தவறுதலாக சேதப்படுத்தியதாக சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று தொடர்ந்து விசாரித்துவருகிறோம். குடோனில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஏற்கனவே அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டது தற்போது குடோனில் மாற்று இயந்திரங்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது" என்றார்.