சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை விவகாரத்தில் காவல் துறை மீது பொதுமக்களிடையே ஒருவித அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக சில தினங்களுக்கு முன்பு பொறறுப்பேற்ற மணிவண்ணன், தனக்கு கீழ் பணிபுரியும் காவலர்களுக்கு பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்க எண்ணினார்.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டம் தாழையுத்து உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கான அறிவுரைக் கூட்டம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, பொதுமக்களிடம் காவலர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், காவல் நிலைய ஆவணங்களைப் பராமரித்தல், காவல் நிலையப் பணிகளைச் சட்டப்படி மேற்கொள்ளுதல் போன்றவை குறித்து அவர் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் காவலர்கள் பணியின்போது முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், உடல்நிலையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.