திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன், பல்வேறு பொது மேடைகளில் பேசி வருகிறார்.
சமீபத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் நூற்றாண்டு விழாவில் பேசிய நெல்லை கண்ணன், திருநெல்வேலி தொகுதியின் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எல்.எஸ் லட்சுமணன் குறித்து இழிவாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
குறிப்பாக கட்சித் தலைமை வழங்கிய நிதியை லட்சுமணன் சரிவர செலவு செய்யவில்லை என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக் கண்ணனிடம் நெல்லை கண்ணன் மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும் நெல்லை கண்ணனுக்கு எதிராக திமுக நிர்வாகிகள் நெல்லை மாநகர் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டி இருந்தனர்.
இந்தச் சூழ்நிலையில் நெல்லை கண்ணன் நேற்று (ஆகஸ்ட்.10) மாலை திடீரென வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக திமுகவினர் புகாரளித்துள்ள நிலையில், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு - அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை