நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணிகளில் இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள நிலையில் இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
அந்த வகையில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து நாங்குநேரி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுகவின் வேட்பாளர் நாராயணன் ரவுடி என்றும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மு.க. ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், தன் மீது திமுக ஆட்சிக்காலத்தில் தான் பொய்யான வழக்குகள் அனைத்தும் போடப்பட்டதாகவும், ஆனால் அவை அனைத்தையும் பொய் என நிரூபித்து தற்போது விடுதலை பெற்று விட்டதாகவும் தெரிவித்தார்.
திமுகவில் இருப்பது போன்ற ரவுடிசம் அதிமுகவில் இல்லை என்றும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் என அனைவரும் உள்ள கட்சிதான் திமுக எனவும் சாடினார். தான் கொடுத்துப் பழக்கப்பட்டவன், கெடுத்து பழக்கப்படவில்லை என்றும் நாராயணன் கூறினார். ஸ்டாலின் குடும்பமே ரவுடி குடும்பம், அவர்கள் தன்னை ரவுடி என்று கூறுவதா என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...
பிரதமர் நரேந்திர மோடியுடன் ராமதாஸ் -அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!