நெல்லை: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜன.5) புத்தொழில் கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், மென்பொருள் நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் மின் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்து கொண்டு, 'அரசின் திட்டங்கள் மக்கள் கையில்' என்ற வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து புத்தொழில் கண்டுபிடிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் நிறுவனத்தினர் ஆகியோருடன் துறை ரீதியான வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், "தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறை நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. அண்மையில் மென்பொருள் நிறுவனம் அமைப்பதற்காக 68.80 ஏக்கர் நிலம் எல்காட் நிறுவனம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவில் ஒரே நிறுவனத்திற்கு தொழில் தொடங்க 9 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில் நூட்பத்தில் தமிழகம் ஓராண்டில் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. தென்மாவட்டங்களில் விரைவில் தகவல் தொழில்நுட்பத்துறை- தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். 'மக்கள் ஐடி' என்ற தமிழ்நாடு அரசின் திட்டம் யாருக்கும் எதிரானது அல்ல, அரசின் நலத்திட்டங்களை வழங்குவதற்கு ஏதுவாகவே இது கொண்டு வரப்படுகிறது. இது ஒவ்வொரு குடும்பங்களின் பொருளாதார நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாகவும், தகுதியான நபர்களுக்கு திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் உதவும். இந்த முன்னெடுப்பை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தேவையில்லாமல் பேசி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு போட்டி இல்லை. தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தால், இந்தியாவே வளர்ச்சி அடைந்தது போலத்தான். பொருளாதாரத்தில் 1 ட்ரில்லியன் டாலரை இலக்காக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இ-சேவை 2.0 திட்டத்தின் மூலமாக இ-சேவை மையங்கள் மேம்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெருங்குடி குப்பைக்கிடங்கை மீட்கும் பணி; பயோ மைனிங் செய்ய மாநகராட்சி திட்டம்