விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பேராசிரியை நிர்மலாதேவி. இவர் மாணவிகளை தவறான பாதையில் அழைத்து செல்ல முயன்றதற்கான ஆடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிர்மலா ஜாமீனில் விடுதலையாகிய சூழலில் கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரானபோது மனநிலை சரியில்லாதவர்போல் நடந்துகொண்டார். இதனைக் கருத்தில்கொண்டு, இவரை நெல்லையில் உள்ள ஒரு தனியார் மனநிலை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன்படி, சிகிச்சை தொடங்கிய சில தினங்களில் அவர் மிகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சை அளித்துவந்தனர். இதனையடுத்து சிகிச்சை மூலம் உடல்நலத்திலும், மனநலத்திலும் முன்னேற்றம் அடைந்த அவர் ஓய்வு எடுக்க தனிமையான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கவுன்சிலிங், யோகா, உடற்பயிற்சி போன்ற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன. மேலும், சில தினங்கள் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று அவர் மீண்டும் சொந்த ஊர் திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.